Sunday, April 11, 2010

நாடு கடந்த நாடோடி



வழமை யான சேவல் கூவும் சத்ததோடு now time is ten thirty என்ற ஆங்கில உச்சிப்புடன் அலாம் அடித்த புது மணிக்கூட்டை செல்லமாக தலையில் தட்டியபடி
எழும்பினான் ரூபன். மீண்டும் ஒருமுறை மணியை சரி பார்த்தபோது அவனுக்கு அவன் மீது கோபம் கோபமாக வந்தது."ஊர்ல தான் இப்பிடி விடிஞ்ச பிறகும் படுத்தனி. இப்ப கடல் கடந்து வேற நாட்டில வந்தும் இதே நிலமை என்டால் நீ எல்லாம் எப்படிடா உருப்படப் போற"என்று அவனது மனசாட்சி அவனை திட்டியது அவனது காதிற்கும் கேட்டிருக்கும்."உதமாதிரி எத்தினைய கேட்டிருப்பம். எங்களுக்கு சுட்டுப்போட்டாலும் புத்திமதி சொல்லுறது சரிவராது" என்று தனக்கு தானே சென்னபடி குளியலறைப்பக்கமாக நடக்க நினைத்த போது சொல்லி வைத்தது போல அவனது கைத்தொலைபோசி அழைக்கவும் அதே பழைய பாணியில் "கல்லோ" என்றான் வாசனை மாறாத யாழ்ப்பாணதது கிராமத்தவனாய்..

"அடே நான் நகுலன்டா,என்னடா செய்யிறாய்? எப்பிடி இருக்கிறாய்?" என்று தன் பக்கத்துக் கேள்விகளை அடுக்கிக் கொண்டு சென்ற நகுலனிடம் "சும்மா இருப்பது சுகம் தானேடா" என்றான் தனக்கே உரிய நக்கல் பாணியில். குடும்ப நலன்கள் செந்த நலன்கள் விசாரித்த பின் தான் தொடர்பு கொண்ட விடயத்தை நகுலன் ரூபனிடம் சென்ன போது நண்பனின் அறியாமையை நினைத்து கவலைப்படுவதா? அல்லது அவனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பை நினைத்து பெருமையடைவதா? என அவனிடம் எழுந்த கேள்விகளுக்கான பதிலும் அவனிடம் இருந்ததால் தன்னை திடப்படுத்திப் கொண்டு மேலும் தொடர்ந்தான்."இப்ப என்னசெய்யப்போறாய்?" என்றான். "இல்ல மச்சான் நீ வெளிக்கிட்ட ஏஜென்சிட்டை என்ட புத்தகத்தையும் கொடுத்திட்டன், நீதான் எப்பிடியாவது வரோட கதைத்து என்னை கொதியா எத்துற அலுவலை பாக்கோனும்டா" என்று பம்மியபடி கூறி முடித்தான் நகுலன். "அடே! சாமியே நடு ரோட்டில நிக்குது இதில பக்தனுக்கு எப்பிடிடா வரம் கொடுக்கிறது." மச்சான் நான் பாக்கிறன் நீ மற்ற வேலையைபாருடா" என்றபடி தெடர்பை துண்டித்தான் ரூபன்.

ஒருமாதிரியாக காலைக்கடனை முடித்து சுத்த பத்தமாக தான் வைத்திருந்த உள்ளங்கையளவான சாமிப்படத்திற்கு விளக்கு கொழுத்துவதற்காக லைட்டரை தேடினான். அவனது அறையில் தேடி அடுத்த றையில் முடிந்தது அவனது தேடுதல். லைட்டரை அடுத்த அறையில் கண்டதும்,"சனியனுகள். சாமிக்கு விளக்கு கொழுத்திற லைட்டறால சிகரட் பத்திறது போதாம, எடுத்த இடத்திலயும் வைக்கமாட்டாங்கள். வைரவருக்கு நாய் வாய்ச்ச மாதிரி எனக்கும் வந்து வாச்சிருக்குதுகள்" என அவன் கல்லுப் போட்ட தகரப்பேணியானான். அவனது புறு புறுத்தல்கள் அர்த்தமானவைதான். எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு பொரிந்து தள்ளியபடி விளக்கை கொழுத்தினான்."ஊரில
என்டால் விளக்கால எண்ணை வழிய வழிய விளக்கு கொழுத்துவன், இஞ்சை இந்த ஓரு மெழுகு திரியை எத்தனை நாளைக்குத்தான் கொழுத்தப்போறனோ கடவுளே."என்ற போது அவன் கண்களால் கண்ணீர் ஓடியது.

சுயமாக எதையுமே செய்ய முடியவில்லை,ஒழுங்காக வயிறாற சாப்பிட்டு எத்தனை நாளிருக்கும்! என அவன் மனம் கணக்கிட்ட போது கடந்த கால ரூபனை அவனால் முன்னிறுத்திப்பார்க்க முடியவில்லை. இன்றைய சகிப்புத்தன்மை அன்று அவனிடம் இல்லை. அன்று அது இருந்திருந்தால் அவன் நல்ல உத்தியோகத்தில் கைக்களவான சம்பளத்தில் ஊரிலேயே வாழ்ந்திருக்கலாம்." கெடு குடி செற்கேளாது தானே" எனதன்னைத்தானே நொந்தபடி தனது கடந் கால வாழ்க்கையை எண்ணிப்பார்த்தான்.பத்து பதின்மூன்று வருடங்கள் பின் நோக்கி சென்று 1995ல் நின்றது அவனது கற்பனைக் குதிரை."ஏன் இப்படி ஓரு இடப்பெயர்வு வரவேணும்?? செந்த நாட்டிலேயே ஏன் நாங்கள் எல்லாரும் நாடோடியா அலைய வேணும்? என்னும் எவ்வளவு காலம் தான் இந்தப் போராட்டம் தொடரும்? இதற்கு என்னால் என்ன செய்ய முடியும்?"அன்று தனக்குள் தானே கேட்ட கேள்விகளில் கடைசிக் கேள்வியை தவிர மீதியனைத்தையும் இன்றும் ஒரு சொல்விடாமல் அவனால் செல்லமுடியும். அந்தக்கடைசிக் கேள்விக்கான விடை தேடலின் பிரதி பலன் தான் இன்றைய அவனது இருப்பு என்பது மறை முகமான உண்மையாகும்.

ஒட்டு மொத்த யாழ்பாணமும் உடுத்த உடையோடும். எடுத்த பொருளோடும் பாலம் கடந்த போது கொதித்த இளைஞர் கூட்டம் இன்று திக்கு தெரியாமல் உருவம் இல்லாமல்,கால் இல்லாமல்,கையில்லாமல், நிலையே இல்லாமல் போய்விட்டது. போராளியாகி பயிற்சிகள் பல பாசறைகள் கண்டு களமாடி காயப்பட்டு பயிற்றுவிப்பாளனான்.

அவனைப் போன்ற குட்டையான மெல்லிய உருவத்தை காணும் போது ஆரம்பத்தில் அவன் கேட்ட ஏளனப் பேச்சுக்கள் காதுக்குள் வந்து போகும். அதிலும் சாப்பாட்டு மணியண்ணை "வெட்டி வைச்ச மரவள்ளிக்கட்டை சைசில இருந்து கொண்டு ஏனப்பு உனக்கிந்த கோதாரியை?"என்று காணும் போதேல்லாம் அடிக்கடி செல்லும் வசனம் இன்றும் அவனுக்கு குத்தலாகவே இருக்கும். சமாதான காலத்தில் ஓய்வுபெற்று வெளியேறியவனை தெற்றிக் கொண்டது வெளிநாட்டு மோகம்.

பிறகென்ன ஒருநாளில் கடவுச்சீட்டு எடுத்து மூன்று கிழமைகளில் பிளேன் ஏறி வேற்றுதேசம் வந்தவனை ஆறுமாதமாகியும் உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்கவில்லை அவன் நம்பிய ஏஜென்சி. இவன் மட்டுமல்ல இன்னும் நான்கு பேரும் தான். "டேய் இண்டைக்கு நீயெல்லே சமைக்கிற முறை" என்ற கட்டளையை கேட்டு திடுக்கிட்ட அவன் "கட்டளை போட்ட எனக்கே கட்டளை போடுறாங்கள். எல்லாம் என்ர விதி. இங்கயிருந்து போகுமட்டும் பேசாம இருக்கோனும்" என்ற எண்ணியபடி"நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்" என்று 'சேகுவாரா' சொல்லிய புரட்சிவசனத்தை வாயில் முனு முனுத்தபடி சமைப்பதற்கு ஆயத்தமானான் ருபன்.